விமல் வீரவன்சவின் பேரணிப் பேச்சு! பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, செப்டெம்பர் 12ஆம் திகதி நடைபெற்ற பேரணியில் தெரிவித்த கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்புக்கு உட்படுகின்றனவா என்பது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பில் முந்தைய வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்து விமல் வீரவன்ச பேரணியில் தெரிவித்த கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பாக அமைகின்றனவா என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவு
விமல் வீரவன்ச குறித்த பேரணியில் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய காணொளி பதிவுள்ள குறுந்தகட்டையும்(CD) அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
நீதிமன்றத்தின் அதிகாரத்தைப் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதவானிடம் கோரிக்கை விடுத்தார்.

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.
மேலும், இந்த விடயம் தமக்கு எதிரான தனிப்பட்ட பிரச்சினையாகக் கருதப்படக் கூடாது எனவும், ஒட்டுமொத்த நீதித்துறையின் அதிகாரம் தொடர்பான விடயமாகக் கருதப்பட வேண்டும் எனவும் பிரதம நீதவான் குறிப்பிட்டார்.