எனது மகனை மீட்டுத் தாருங்கள்: மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீருடன் கோரிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் அழுது புலம்பியவாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகமொன்றில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின் போதே குறித்த இளைஞர் சவூதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
பகிரங்கமாக மன்னிப்பு
குறித்த பதிவை அவர் உடனடியாகவே சமூக ஊடகத்திலிருந்து நீக்கியதுடன், அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியிருந்தார்.
மேன்முறையீட்டில் அதிகரித்த தண்டனை இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, நீதிமன்றத்தினால் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டு விசாரணைகளின் போது இத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவரது தாயார்,
“எனது மகன் தெரியாமல் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறோம். அவனை மன்னித்து, உயிருடன் மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அழுது புலம்பியவாறு வேண்டுகோள் விடுத்தார்.

இளைஞர் அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கம் சவூதி அதிகாரிகளுடன் அவசரமாக உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும் பிரதேச சமூக தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இளைஞர் அனோஜனைக் காப்பாற்றுவதற்காகச் சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் அவசரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சவூதி அரசிடம் கருணை மனுக்கோருவது தொடர்பிலும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சவூதியில் கைதான இலங்கை இளைஞன் அனோஜனுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை