டுபாய் பிரியங்கரவின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கிய முன்னாள் கடற்படை சிப்பாய் கைது!
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுவொன்றின் போதைப்பொருள் வலையமைப்பை இலங்கையில் இயக்கி வந்ததாக சந்தேகிக்கப்படும் முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவர், போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய, நாகஹமுல்ல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது 43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட நடவடிக்கை
விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கை II பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 716 கிராம் ஹெரோயின் மற்றும் 255 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, அதற்கான மகசின் மற்றும் சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் முன்னர் இலங்கை கடற்படையில் பணியாற்றியவர் எனவும், பின்னர் சேவையிலிருந்து தப்பிச் சென்றவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
எனினும், 2025ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் அவர் சட்டபூர்வமாக கடற்படை சேவையிலிருந்து விலகியுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தற்போது டுபாயில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் ‘டுபாய் பிரியங்கர’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் நபரின் இலங்கையிலுள்ள போதைப்பொருள் வலையமைப்பை இவர் பிரதானமாக இயக்கி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பை உலுக்கிய மட்டக்குளி கோர விபத்து: கைதான சாரதி போதைப்பொருள் பயன்படுத்தவில்லை...! நீதிமன்றில் வெளியான தகவல்