கேகாலையில் அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காரியாலயம்
கேகாலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காரியாலயம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளார்.
கேகாலை மாவட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காரியாலயம் ஒன்றை பெற்றுத்தருமாறு முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு மதிப்பளித்து காரியாலயம் ஒன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நேற்று (23.02.2024) உறுதியளித்துள்ளார்.
கேகாலை நிதகஸ் மாவத்தை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "இலங்கையை வெற்றிகொள்வோம்" மூன்றாம் கட்ட வேலைத்திட்டத்தின் முதலாவது நாள் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்த போதே அமைச்சரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
வழங்கப்பட்ட கடிதம்
கேகாலை மாவட்டத்துக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காரியாலயம் ஒன்று இல்லாமை பாரிய குறைபாடாகும் என தெரிவித்து, கேகாலை மாவட்ட வெளிநாட்டு தொழிலாளர்களின் இயக்கத்தினர் அமைச்சருக்கு தங்களது கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை ஒப்படைத்துள்ளனர்.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்துக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காரியாலயம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தமைக்கு இதன்போது கேகாலை மாவட்ட வெளிநாட்டு தொழிலாளிகளின் இயக்க உறுப்பினர்கள் தங்களது பாராட்டை தெரிவித்திருந்தனர்.
அவ்வாறே, தங்களது கோரிக்கைக்கும் விரைவாக பதில் ஒன்று வழங்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கமைய, முன்வைக்கப்பட்டிருந்த விடயங்களை கருத்திற்கொண்டு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய காரியாலயம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்க விரைவாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |