நாமல் ராஜபக்சவிற்கு இலஞ்சம் வழங்கியதாக கூறப்படும் நிமல் பெரேராவை ஏன் கைது செய்யவில்லை! சாகர காரியவசம்
"ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் நாங்களும் முழுமையாக உறுதியாக உள்ளோம். அரச நிதியை மோசடி செய்தவர்கள் மற்றும் இலஞ்சம் பெற்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் எமக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
எனினும், 13 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், பிறிதொரு நாட்டில் இருந்துகொண்டு நிமல் பெரேரா என்ற நபர் வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் நாமல் ராஜபக்ச செய்யப்பட்டமை முற்றிலும் தவறான செயலாகும்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைச் செயலகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் கூறியதாவது,
ஜனாதிபதியின் கருத்து
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொலன்னறுவையிலும் அனுராதபுரத்திலும் ஆற்றிய இரு உரைகளையும் ஊடகச் செய்திகளில் நான் பார்த்தேன். அவர் நாட்டின் ஜனாதிபதி என்ற பொறுப்புமிக்க பதவியில் இருந்துகொண்டு நாட்டின் தேசிய பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் அதன் தலைவர்களையும் பற்றியே தொடர்ந்து விமர்சித்துப் பேசுகின்றார். அதைப் பார்க்கும்போது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.

அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில், நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் அதன் தலைவர்களையும் மாத்திரம் விமர்சித்துச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றால், ஜனாதிபதி தன் தோல்வியை மறைமுகமாக ஏற்றுக்கொண்டார் என்றே நாம் கருத வேண்டியுள்ளது.
அரசின் மீது மக்களுக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக ஜனாதிபதி திரும்பத் திரும்பக் கூறுகின்றார். அவ்வாறாயின், தமக்குத் மக்கள் மத்தியில் உண்மையான ஆதரவு இருப்பதை நிரூபிக்க மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தலாம் தானே?
தேர்தல் முறைமையைக் காரணம் காட்டி தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுவதன் உண்மையான நோக்கம் என்ன?
அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி
மக்களின் அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தாத அரசு, அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றது.
ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் நாமும் உறுதியாக உள்ளோம். அரச நிதியைச் சுருட்டியவர்கள் மற்றும் இலஞ்சம் பெற்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால், 13 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், வெளிநாட்டில் இருந்துகொண்டு நிமல் பெரேரா என்பவர் வழங்கிய சாட்சியத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமை முற்றிலும் தவறான நடவடிக்கையாகும்.
நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனில், அவருக்கு அந்த இலஞ்சத்தை வழங்கியதாகக் கூறப்படும் நபருக்கு எதிராக இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? எமது கட்சியின் எதிர்கால வெற்றியைத் தடுக்கும் நோக்கத்துடனும், திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் செயற்பாடாகவுமே நாமல் ராஜபக்ச இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.