வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்! ஆற்று பகுதிகளை அண்மித்த மக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை
நாட்டில் இன்று குறிப்பிடத்தக்க மழை பெய்தால், அத்தனகலு ஓயா மற்றும் கலு கங்கையின் கீழ் பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
அத்தனகலு ஓயா மற்றும் கலு கங்கையின் மில்லகந்த மற்றும் எலகாவா பகுதிகளில் நீர்மட்டம் தற்போது உச்ச அளவில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்ப்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை
இதற்கிடையில், களனி ஆற்றில் நீர்மட்டம் வேகமாக உயரவில்லை என்றாலும், படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், தற்போதைக்கு வெள்ள அபாயம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், நில்வலா ஆறு, ஜின், களனி, கலு, அத்தனகலு மற்றும் பெந்தாரா ஆகிய அனைத்து ஆறுகளின் கீழ் பகுதிகளிலும் நீர்மட்டம் தற்போது ஓரளவிற்கு உயர்ந்துள்ளது.
இருப்பினும், வரவிருக்கும் வானிலை நிலவரங்களைப் பொறுத்து நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், குறித்த ஆறுகளின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.