2029 தேர்தலில் மூன்று வேட்பாளர்கள்.. நாமலை சந்தித்த பின் கம்மன்பில சர்ச்சை கருத்து!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நலன் விசாரிப்பதற்காக, இன்றையதினம், பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சென்றுள்ளார்.
இதன்போது அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சிகளை கடுமையாக ஒடுக்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், "அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சியின் குமார குணரத்ன, அநுர குமார திசாநாயக்க மற்றும் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் ஆகியோர் மட்டுமே வேட்பாளர்களாக எஞ்சியிருப்பார்கள் என்று அவர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர்.
2029 ஜனாதிபதித் தேர்தல்..
எதிர்கட்சியினரைக் கைது செய்து, அனைவரையும் சிறையிலடைத்து, 2029 ஜனாதிபதித் தேர்தலை ஒருவரே போட்டியிடும் பந்தயமாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஒரு கொடூரமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

கட்சி வேறுபாடின்றி வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்திற்கு மக்கள் திரள்வதைப் பார்த்தாலே இந்த நாட்டின் மக்கள் தங்களுக்கு எந்தளவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள முடியும்.
இப்போது நாம் இந்த முறைமையிலேயே சென்றால், தேர்தல் மிகவும் ஜனநாயகப்பூர்வமானதாகி விடும். சிலர் சொல்வது போல் நாங்கள் சர்வஜன வாக்கெடுப்பு பற்றிப் பேசவில்லை.

தங்களுக்கு அச்சுறுத்தலாக இல்லாத வேட்பாளர்களுக்கு மட்டும் வாய்ப்பளித்துவிட்டு, தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைவரையும் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டில் கைது செய்து 2029 ஜனாதிபதித் தேர்தலை ஒருவர் மாத்திரம் போட்டியிடும் பந்தயமாக மாற்றவே இவர்கள் முயல்கிறார்கள் என்பதை நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்.
எதிர்க்கட்சியில் உள்ள சிலர், 'அவர்களைச் சிறையில் அடைத்தாலும் நம்மை விட்டுவிட்டார்கள், அவர்களைப் பற்றி நாம் பேசுவது தவறு' என்று நினைக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.