இரகசிய ஆவணங்களுடன் இறுதிக்கட்டத்தில் எயார்பஸ் விவகாரம்! மற்றுமொரு ராஜபக்சவை கைது செய்ய களமிறங்கிய அதிகாரிகள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) கொள்முதல் மோசடி தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள விசாரணை
இந்நிலையில், அஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் சர்வதேச உதவியுடன் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த பரிவர்த்தனை தொடர்பான அனைத்து ஆவணங்கள், மின்னஞ்சல்கள், கணக்கு விவரங்கள் போன்றவையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும், விசாரணையின் போது, நாமல் ராஜபக்சவிற்கு எதிராக கண்டறியப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்யும் எயார்பஸ் (Airbus) ஒப்பந்த ஊழல் வழக்கில், நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த வேளையில், கபில சந்திரசேன மே 08 அன்று மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
கைது செய்யப்பட்ட போது கபில சந்திரசேன நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் மற்றும் அதன் பின்னணியில் பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
சந்தேகநபர்களுக்கு திறந்த பிடியாணை
இதற்கிடையில், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவரை கைது செய்து நாட்டிற்கு திரும்பக்கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையில், மற்றொரு சந்தேகநபரான ஷமிந்திர ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கேள்விக்குட்பட்ட எயார்பஸ் பரிவர்த்தனை தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க எயார்பஸ் தாய் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விசாரணை இறுதிக்கட்டத்தில் இருப்பதால் எயார்பஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் 3 முறை அந்நாட்டிற்குச் சென்று 4 வாக்குமூலங்களை அளித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22