டொலர் பற்றாக்குறையால் நெருக்கடியில் இலங்கை - அநுர ஆட்சியில் தொடரும் ஊழல் குற்றச்சாட்டு
இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின் ஊழல்களும் முறைகேடான நிர்வாகமுமே முதன்மைக் காரணம் என இடதுசாரி கேந்திர அமைப்பின் செயற்பாட்டாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(07.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாமல் ராஜபக்ச தனக்கு எதுவுமே தெரியாது எனப் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றார்.
இருப்பினும், கைதான நபர் ஒருவரின் வாக்குமூலங்களும், கேமன் தீவுகளில் நடைபெற்ற விருந்தொன்றில் தொழிலதிபர் நிமால் பெரேராவுடன் நாமல் ராஜபக்ச இணைந்து இருக்கும் புகைப்படங்களும் உண்மை நிலையை வெளிப்படுத்துகின்றன.
கப்பம் பெறும் ஊழல்வாதிகள்
கப்பம் பெறுபவர்களுடனும் ஊழல்வாதிகளுடனும் கேமன் தீவுகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டது யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச, சஜித் பிரேமதாஸ மற்றும் உதய கம்மன்பில போன்ற அரசியல்வாதிகள் வெளிநாட்டு ஒப்பந்தங்களில் பெருமளவு நிதி முறைகேடுகளைச் செய்துவிட்டு, தற்போது ஏதும் அறியாதவர்கள் போல் நடிக்கின்றார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகளின்படி, நாட்டுக்காகப் பெறப்பட்ட கடன்களுக்கு இணையான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
எனவே, கடனாகப் பெறப்பட்ட பல மில்லியன் டொலர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு இவர்கள் பதிலளிக்க வேண்டும். ஜே.வி.பி. இந்தியாவுக்கு முன் மண்டியிட்டுள்ளது என்று விமல் வீரவன்ச கூறுவது அறியாமையாகும்.
எரிபொருள் வாங்க டொலர் இன்மை...
நாட்டில் எரிபொருள் வாங்குவதற்குக் கூட டொலர் இல்லாத நிலையை உருவாக்கி, நாட்டை இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளியது யார்?
தரமற்ற மற்றும் கழிவு உரக் கப்பல்களை நாட்டுக் குள் கொண்டுவந்து நாட்டின் விவசாயத் துறையை முற்றாக அழித்தது யார் என்பதை விவசாயிகள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இனிமேலும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற அவர்கள் தயாராக இல்லை.

மக்களின் வரிப்பணத்திலும் வெளிநாட்டுக் கடன்களிலும் சுகபோகம் அனுபவித்த இந்த ஆட்சியாளர்கள் செய்த ஊழல்களில் இது ஒரு சிறிய பகுதி மட்டுமே.
தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மிகத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
இரகசிய ஆவணங்களுடன் இறுதிக்கட்டத்தில் எயார்பஸ் விவகாரம்! மற்றுமொரு ராஜபக்சவை கைது செய்ய களமிறங்கிய அதிகாரிகள்