மகாசேன மன்னன் இருந்திருந்தால் கழுவேற்றப்பட்டிருப்பீர்கள்! அரசாங்கத்திற்கு கடுமையான எச்சரிக்கை
கமத்தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பசளை பிரச்சினைக்கு துரிதமாக சரியான தீர்வை வழங்கவில்லை என்றால், ஆயிரக்கணக்கான கமத்தொழிலாளர்கள் கொழும்பை நோக்கி வருவார்கள் என எச்சரிப்பதாக அகில இலங்கை கமத்தொழிலாளர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் நாமல் கருணாரத்ன(Namal karunaratne) தெரிவித்துள்ளார்.
சேதனப் பசளைக்கு பதிலாக இரசாயன பசளையை இறக்குமதி செய்து அரசாங்கம் தவறிழைத்துள்ளது எனவும் அந்த தவறை ஏற்றுக்கொண்டு பசளை குறித்த அரசாங்கத்தின் தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில்,
குளங்கள் நிறைந்துள்ளன. தண்ணீர் இருக்கின்றது. விவசாயிகள் இருக்கின்றனர். வயல்கள் இருக்கின்றன. வயல்கள் தரிசு நிலமாக மாற இடமளிக்கப்பட்டுள்ளது. இப்படி வரலாற்றில் எப்போதும நடந்ததில்லை.
மகாசேனன் மன்னர் தற்போது இருந்தால், இந்த ஆட்சியாளர்களை கழுவேற்றி இருப்பார். தலைகளை கொய்திருப்பார். பெரும் போகம் ஆரம்பித்து ஒரு மாதமும் இரண்டு நாட்களும் கடந்துள்ளது.
எந்த பசளைகளும் கமதொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. அரசாங்கம் அண்மையில் 8.56 மில்லியன் டொலர்களை செலவு செய்து 17 ஆயிரத்து 892 மெற்றி தொன் பசளையை இறக்குமதி செய்தது. இதனை அரசாங்கம் சேதனப் பசளை எனக் கூறியது.
இறக்குமதி செய்யப்பட்டிருப்பது சேதனப் பசளை அல்ல எம்.ஓ.பி பசளை என்பதை மிகவும் பொறுப்புடன் கூறுகின்றோம். சேதனப் பசளை எனக் கூறி ஏன் இரசாயன பசளையை இறக்குமதி செய்தனர்.
மண் பசளை தேவைப்படும் போது ஏன் மண்டி பசளை வழங்கப்படுகிறது. உண்மையை கூறினால், விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்த மாட்டார்கள் எனவும் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.