விடுதலைப் புலிகளின் தலைவரது இல்லத்திற்கு முன்னால் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி
தமிழ் மக்களின் உரிமை கோரிய யுத்தத்தின் இறுதி தருணங்களை, தமிழினப்படுகொலையை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாவது நாளான இன்றும் (14) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம்
இதற்கமைய, விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீட்டின் முன்றலில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் நினைவு ஊர்தி பவணியும் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, யாழ். (Jaffna) வட்டுக்கோட்டை பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் (Esvarapadam Saravanabhavan) ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறி இரு மாவீரர்களின் தந்தையான தங்கேஸ்வரனால் பொதுச்சுடர் மற்றும் ஈகைச்சுடரேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
துண்டுபிரசுரம்
இதனைதொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நெல்லியடி மற்றும் அச்சுவேலியிலும் நாளை 15ஆம் திகதி கோப்பாய், மானிப்பாய், நல்லூர் பிரதேசங்களிலும், 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும் மற்றம் 18ஆம் திகதி காரைநகரிலும் குறித்த நினைவு பவணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இறுதிநாள் நினைவேந்தல் சங்கானையானது யாழ். பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும் என ஏற்பாட்டுக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - கஜிந்தன், ராகேஷ்
மூன்றாவது நாள்
அதேவேளை, யாழ்ப்பாணம் - உரும்பிராய் மேற்கு இளைஞர்களால் தியாகி பொன் சிவகுமாரன் சிலை முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மூன்றாவது நாளாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரியக்க ஒருங்கிணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான வேலன் சுவாமிகள் மற்றும் உரும்பிராய் மேற்கு இளைஞர்கள் கிராம மக்கள் பயணிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
கிளிநொச்சி
அது மாத்திரமன்றி, கிளிநொச்சி (Kilinochchi) பொது சந்தை வளாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களாலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கிளிநொச்சி வாடகை வாகன உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |