முல்லைத்தீவு பாடசாலை ஒன்றின் மாணவர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
முல்லைத்தீவில் உள்ள ஒரு கிராமத்தினைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று வருவதில் பாரியளவிலான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நீண்ட தூரம் நடந்து சென்று பேருந்தைப் பிடித்து பாடசாலை சென்று வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல இடங்களில் மாணவர்களின் தொகை குறைவாக இருப்பதை காரணம் காட்டி பாடசாலைகள் மூடப்பட்டு வரும் இன்றைய நாட்களில் தியோகு நகரில் ஒரு பாடசாலையை தொடங்குமளவுக்கு மாணவர்களும் உள்ளனர்.
இது போலவே ஒரு பாடசாவையினை ஆரம்பிப்பதற்கான தேவைப்பாடும் கூட அங்கே நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது.ஆரம்பப் பாடசாலை ஒன்றின் தொடக்கம் அப்பகுதி மக்களுக்கு கிடைக்கக் கூடிய ஆரம்பத் தீர்வாக அமையலாம் என சமூகவிடய ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களின் பிரச்சினை
ஒரு கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று பிரதான பேருந்து வழித்தடத்தை அடைந்து அங்கிருந்து பேருந்தின் மூலம் பாடசாலைக்குச் செல்கின்றனர்.
மீண்டும் திரும்பி வரும் போதும் இதே நடைமுறை பேணப்படுவதாக இவர்கள் தொடர்பில் கருத்திட்ட சமூக ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தியோகு நகர் என்ற கிராமம் ஒரு கடற்கரையோர கிராமம் ஆகும்.கடற்கரையை அண்மித்துள்ள பாதை வழியே முல்லைத்தீவு நகரை அடைய முடியும் என்ற போதும் அந்தப் பாதை வழியே பேருந்துப் பயணங்களின் வழித்தடம் இல்லை.
அதனால் அந்த பாதை வழியே பயணிகள் போக்குவரத்து பேUந்துகள் செல்வதில்லை.அப்படி ஒரு பேருந்து செல்லுமாயின் தியோகு நகர் மக்களுக்கும் மாணவர்களுக்கும் போக்குவரத்து சிரமம் ஏற்படாது என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் உள்ள பேருந்து வழித்தடத்தின் வழியே தான் பயணிகள் பேருந்து சென்று வருகின்றது.
பேருந்து சங்கங்கள்
தியோகு நகரில் இருந்து மாணவர்களும் சரி மக்களும் சரி ஒரு கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியை அடைகின்றனர்.பின்னரே அவர்களால் பேருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
காலையில் பாடசாலைக்கு ஆயத்தமாகி முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் வந்து பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்கள் பேருந்து தாமதமாகி வரும் பல நாட்களை எதிர்கொள்ள நேரிட்டதாக அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது குறிப்பிட்டுள்ளனர்.
சில சமயங்களில் பேருந்து இல்லாது போகும் போது மீண்டும் திரும்பி வீடு செல்ல நேரிட்ட நாட்களும் உண்டு என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பேருந்து சங்கங்கள் மேற்கொள்ளும் திடீர் போராட்ட நடவடிக்கைகள் இந்த மாணவர்களைப் பாதிக்கின்றன.
பேருந்துகள் ஓட்டத்தை நிறுத்தி எதிர்ப்பைக் காட்டும் நாட்களில் இவர்களுக்கு முன்னனிவித்தல் கிடைப்பதில்லை. இதனாலேயே இந்த துயரம் ஏற்படுவதாக சமூக விடய ஆய்வாளர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
பாடசாலையை விட்டு வீடு திரும்பும் போதும் பல நாட்கள் பாடசாலையில் இருந்து நடந்தே வீடு வருவதாகவும் பாடசாலை விடும் நேரத்திற்கும் பேரூந்து வரும் நேரத்திற்கும் பொருத்தப்பாடு இருப்பதில்லை எனவும் மாணவர்களில் சிலர் தாங்கள் எதிர் கொள்ளும் கஷ்டங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக கற்றல் செயற்பாடுகள்
தியோகுநகர் கிராமத்தில் இருந்து சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்திற்குச் சென்று வரும் இந்த மாணவர்கள் தங்கள் பயணத் தூரமாக மூன்று கிலோமீற்றரை ஒற்றை வழித்தடத்தில் கொண்டுள்ளனர்.
இவர்களுக்குள்ள போக்குவரத்து நெருக்கடியினால் ஒரு நாள் பொழுது வீணடிக்கப்படுவதாக அவர்கள் சார்பில் பேசிய மற்றொரு சமூக ஆர்வலர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பாடசாலை முடிந்து வரும் இந்த மாணவர்களால் ஏனைய இடங்களில் உள்ள மாணவர்களைப் போன்று மேலதிக மாலைநேர வகுப்புக்களுக்குச் செல்ல முடிவதில்லை.
தாங்களாகவே வீட்டில் மேற்கொள்ளும் சுய கற்றலில் ஈடுபடுவதற்கு கூட நேரமின்மை இருக்கின்றது.பாடசாலையில் கொடுக்கப்படும் வீட்டு வேலைகளை செய்து விட்டு மீதமுள்ள நேரங்களிலேயே சுய கற்றலில் ஈடுபட முடியும்.இதனால் சுயகற்றலுக்கு போதியளவு நேரம் இல்லாமையும் அவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களில் ஒன்றாக இருப்பதாக அவர் விளக்கியுள்ளார்.
தீர்வு என்ன?
தியோகு நகர் கிராமத்தில் உள்ள இந்த மாணவர்களின் துயரத்திற்கு நல்ல தீர்வாக இரு விடயங்களை முன்வைக்கும் சமூக விடய ஆய்வாளர் அவற்றை நடைமுறைப்படுத்தும் உடனடிச் சாத்தியப்பாடுகள் பற்றி துறைசார் அதிகாரிகள் ஆராய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தியோகு நகர் கிராமத்தின் ஊடாக ஒரு பேருந்து சேவையை ஆரம்பித்தல் இதற்கு ஒரு தீர்வாக அமையலாம்.
இந்த நடைமுறையினை தன்னார்வலர் ஒருவரால் கோவிட் -19 நிலைமைக்கு முன்னர் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது.
பாடசாலைச் சேவை என பெயரிட்டு ஒரு பேருந்தினை கொக்கிளாய் முதல் முல்லைத்தீவு வரை பாடசாலை மாணவர்களுக்கென இயக்கி வந்துள்ளார்.காலை பாடசாலைக்குச் செல்லவும் அது போல் மீண்டும் பாடசாலை விட்டு வீடு திரும்பவும் இந்த பேருந்து சேவை இருந்துள்ளது.
எனினும் கோவிட் -19 இன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினை அடுத்து அந்த சேவையினை நிறுத்தி விட்டார்.அதனை மீளவும் ஆரம்பித்தால் அல்லது அதுபோல் ஒரு சேவையை தனியார் பேருந்துகளோ அன்றி அரச பேருந்தோ தியோகு நகரினுடாக அப்பகுதி மாணவர்களின் நலன் கருதி இயங்கினால் அந்த மாணவர்களுக்கான ஒரு தீர்வு கிடைக்கும்.
பாடசாலையொன்றை ஆரம்பித்தல்
இதற்கு மற்றொரு தீர்வாக தியோகு நகரில் ஒரு பாடசாலையை ஆரம்பிப்பதாகும்.
தரம் 1 முதல் தரம் 11 வரையான ஆரம்ப மற்றும் இடைநிலை மாணவர்களைக் கொண்டு இப்பாடசாலையினை செயற்படுத்த முடியும்.
அப்படி ஆரம்பிக்கப்படும் பாடசாலை தன்னைச் சூழவுள்ள ஏனைய பாடசாலைகளில் இருந்து இரண்டு கிலோமீற்றரிலும் கூடியளவு இடைத்தூரத்தினை பேணிக்கொள்ளும்.
தீர்த்தக்கரை மற்றும் தியோகு நகர் ஆகிய இரு கிராமங்களையும் சேர்ந்த மாணவர்களோடு சிலாவத்தை தெற்கு கிராம சேவகர் பிரிவினுள் வரும் 3ஆம் கட்டை வாழ் மாணவர்களுக்கும் இது அருகிலுள்ள பாடசாலையாக இருக்கும்.
இந்த முயற்சிக்கு உள்ளீர்க்கப்படக் கூடியதாக 100 மாணவர்கள் அளவில் சுட்டிக்காட்டப்பட்ட கிராமங்களில் இருக்கின்றனர் என்பது தேடலின் போது பெறப்பட்ட தகவல்களில் இருந்து அறிய முடிகின்றது.
இப்போதுள்ள சூழலில் தரம் 1 முதல் தரம் 5 வரையான ஆரம்ப பாடசாலை ஒன்றையாவது ஆரம்பிக்கலாம் என்பது தேவைப்பாடானது.
தியோகு நகரின் கிராம சேவகர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் தலைவர் உள்ளிட்ட கிராம அமைப்புப் பிரதிநிதிகளுடன் இது தொடர்பில் மேற்கொண்ட உரையாடலின் போது அவர்களும் இது தொடர்பிலான உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தும் முகமாக தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
முயற்சிக்கப்படுமா?
தியோகு நகர் மாணவர்களின் சிரமத்தினை போக்கும் வகையில் துறை சார்ந்தோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் இணைந்து முயற்சிப்பார்களா?
உடனடித் தீர்வு மற்றும் நீண்டகாலத் தீர்வு என்ற அடிப்படையில் மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் முயற்சிக்கு உறுதுணை நின்று செயற்பட வேண்டும்.
ஒரு கிராமத்தின் வளர்ச்சி என்பது அந்த கிராமத்தில் இருந்து உருவாகும் அந்த கிராமத்திலேயே தொடர்ந்து வாழும் உயர் நிலை தொழிலை செய்யும் (கூடிய சம்பளம் பெறும் தொழில்) மனிதர்களால் ஆனது என்ற நோக்கில் தியோகு நகர் கிராம மக்களின் வளர்ச்சி நோக்கிய செயற்பாடாகவும் இந்த முயற்சி அமையும் என்பது திண்ணம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |