செல்வம் அடைக்கலநாதன் எம்.பியை கைது செய்ய அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக அவர் தரப்பு தகவல்கள் உறுதிப்படுத்தின.
இதேவேளை, யுத்த காலப் பகுதியில் இந்திய ஊடகத்திற்கு பிரத்தியேகமாக செல்வம் அடைக்கலநாதன் செவ்வி வழங்கவில்லை என்றும், வவுனியாவில் வைத்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த கருத்தை இந்திய ஊடகம் ஒன்று ஒளிபரப்பியதாகவும் அவர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த வழக்கு தவணைக்கு முன்னிலையாகாத நிலையில், நாளைய தினம் சட்டத்தரணியூடாக நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக செல்வம் எம்.பியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
வழக்கொன்றின் தவணைக்கு முன்னிலையாகாத காரணத்தினால் இவ்வாறு அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்கு விசாரணை
கடந்த, உள்நாட்டு போர் நடைபெற்ற போது இலங்கை பற்றிய தகவல்களை அதிகாரபூர்வமற்ற இந்திய ஊடகம் ஒன்றிற்கு சட்டவிரோதமாக வெளியிட்டது தொடர்பாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பிக்கு எதிராக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்று நிலுவையில் இருந்துள்ளது.
இந்தநிலையில், குறித்த வழக்குத் தவணைக்கு அவர் முன்னிலையாகத் தவறியுள்ளார்.
இதனையடுத்து, வழக்குத் தவணைக்கு தான் முன்னிலையாகாத காரணத்தினையும், அடுத்த வழக்குத் தவணைக்கு தான் முன்னிலையாவதாகவும் தனது வழக்கறிஞர் ஊடாக செல்வம் எம்.பி மன்றுக்கு அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், மேற்குறித்த காரணங்களை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி செல்வம் அடைக்கலநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |