நாட்டை கட்டியெழுப்பும் இளைஞர் சக்தி எனும் தொனிப்பொருளில் மன்னாரில் மோட்டார் சைக்கிள் பேரணி
“நாட்டை கட்டியெழுப்பும் இளைஞர் சக்தி” என்ற தொனிப்பொருளில் மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணி நேற்று (28.09.2026) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் சோசலிச இளைஞர் சங்கத்தினால் இளைஞர்களை ஒன்றிணைத்து, நாட்டின் எதிர்காலத்துக்குத் தேவையான இளம் தலைமுறையினரை உருவாக்கும் நோக்கில் இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் முதன்முறையாக மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் “நாட்டை கட்டியெழுப்பும் இளைஞர் சக்தி” என்ற தொனிப்பொருளில் இளைஞர் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மாநாட்டிற்கு அழைப்பு
இந்த மாநாடு அடம்பன் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோசலிச இளைஞர் சங்கத்தின் மாநாட்டுக்கான பிரச்சாரப் பணிகளின் முதற்கட்ட நடவடிக்கையாக நேற்று (28) இந்த மோட்டார் சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அப்பகுதி மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

