பின்தங்கிய பிரதேச பாடசாலைகளின் தொண்டர் ஆசிரியர்களுக்கு மாதாந்த ஊதியம் வழங்கி வைப்பு
திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் இம்மாவட்டத்தில் உள்ள 9 பின்தங்கிய பிரதேச பாடசாலைகளின் தொண்டர் ஆசிரியர்களுக்கு மாதாந்த மதிப்பூதியத்தை வழங்கும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.
மாவட்டத்தில் அமைந்துள்ள பல பின்தங்கிய பாடசாலைகளில் கணினி, கணிதம்,விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் இல்லாத சூழல் நிலவுகின்றது.
வெருகல் கோட்டத்தில் உள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரி, திருவள்ளுவர் வித்தியாலயம், துவாரகா வித்தியாலயம் மற்றும் மூதூர் வலயத்தில் உள்ள கங்குவேலி அகத்தியர் வித்தியாலயம், இலிங்கபுரம் தமிழ் வித்தியாலயம், ஆதியம்மன் கேணி தமிழ் வித்தியாலயம், மொறவெவ கோட்டத்தில் உள்ள அவ்வை நகர் தமிழ் வித்தியாலயம், குச்சவெளிக் கோட்டத்தில் உள்ள திரியாய்த் தமிழ் மகாவித்தியாலயம் மற்றும் விவேகானந்தா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு கணிதம், கணினி மற்றும் விஞ்ஞானம் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை.
மதிப்பூதியம் வழங்கி வைப்பு
மாணவரது கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படக்கூடாது என்ற கல்வித் துறையின் வேண்டுகோளுக்கமைய, திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் மேற்படி பாடசாலைகளுக்குத் தொண்டர் ஆசிரியர்களை நியமித்து மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கி வருகின்றது.
2024 கல்வி ஆண்டுக்கான முதல் மாதக் கொடுப்பனவு 10ஆம் திகதி வழங்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் கதிர்வேலு சண்முகம் குகதாசன், பொருளாளர் இராசரத்தினம் கோகுலதாசன் ஆகியோர் இக்கொடுப்பனவுகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இத்திட்டத்தை செயற்படுத்த ஆண்டுக்கு பதினெட்டு இலட்சம் ரூபா செலவு ஏற்படுகின்றது. இதற்கான நிதி அனுசரணையைக் கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |