பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கு: 100ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை
பாகிஸ்தானில் ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்குக் காரணமாக இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.
தொடர் மழையால் 344-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த வார இறுதியில் மேலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தேசிய பேரிடர் முகாமைத்துவ அதிகார சபையின் தகவலின்படி, மழை தொடர்பான சம்பவங்களால் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அதிகபட்சமாக 55 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 36 பேரும் உயிரிழந்துள்ளனர்.
17 நிவாரண முகாம்கள்
உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வீடுகள் மற்றும் கூரைகள் இடிந்து விழுந்ததால் பலியாகியுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரும், பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமுமான லாகூரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைக்க குறைந்தது 17 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

லாகூர் மற்றும் குஜ்ரன்வாலா பிரிவுகளில் சுமார் 400 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு நீரின் தாக்கம் பரவியுள்ளதால், நிலமை உள்நாட்டுக் கடல் போலக் காட்சியளிப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் ஷெரீப், வெள்ள நீரைக் வெளியேற்ற மீட்புக் குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதன்கிழமை முதல் இஸ்லாமாபாத், மேல் பஞ்சாப், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளில் புதிய மழைப் பொழிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
பருவமழைக்காலம் செப்டெம்பர் மாதம் வரை நீடிக்கும் என்பதால், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.