அநுரவின் இந்த ஆட்சியில் புதிய அரசமைப்பு நிச்சயம் - அமைச்சர் சந்தன அபேரத்ன உறுதி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயமாகக் கொண்டுவரப்படும் என்று அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (17.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தம்
அவர் மேலும் கூறுகையில், "அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அது நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும். உயர்நீதிமன்றம் வழங்கும் வழிகாட்டல்களுக்கு அமையவே அரசு தொடர்ந்தும் செயற்படும்.
இந்த 20 ஆவது திருத்தமானது தற்போதைய அவசர தேவையை நிவர்த்தி செய்வதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றது. புதிய அரசமைப்பு ஒன்றை நாட்டில் உருவாக்குவது அரசின் கொள்கைப் பிரகடனத்தில் இடம்பெற்ற பிரதான வாக்குறுதியாகும்.

கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள்
இதில் அரசு மிக உறுதியாக உள்ளது. இந்தப் புதிய அரசமைப்பை அரசு தனித்து உருவாக்கப் போவதில்லை.
நாட்டின் பொதுமக்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் பரந்த அளவிலான கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களை முன்னெடுத்து, அவர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியே புதிய அரசமைப்பு தயாரிக்கப்படும்.
அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்." - என்றார்.
நாட்டிலிருந்து நள்ளிரவில் அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்