மெட்டா நிறுவனத்திற்கு 567 மில்லியன் டொலர் அபராதம்
சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரின் மன ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, 'மெட்டா' நிறுவனத்திற்கு 567 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூ மெக்ஸிகோவில் தொடர்ந்த வழக்கில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் சிறுவர்களை அடிமையாக்கும் வகையிலும், பாலியல் சுரண்டலிலிருந்து அவர்களைப் பாதுகாக்கத் தவறிய வகையிலும் வடிவமைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம்
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிரையன் பீட்ஷீட் (Bryan Biedscheid), மெட்டா நிறுவனத்தின் செயற்பாடுகள் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளதாகத் தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பின்படி, விதிக்கப்பட்ட அபராதத் தொகை சிறுவர்களின் மன நல நிதியத்திற்குப் பயன்படுத்தப்படும்.

அத்துடன், எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குச் சிறுவர்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நேரத்திற்கு மாதாந்தக் கட்டுப்பாடு விதித்தல், அறிவிப்புகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் AI செயற்கை நுண்ணறிவு அரட்டைகளில் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல கடுமையான மாற்றங்களை மெட்டா நிறுவனம் நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ள மெட்டா நிறுவனம், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தாம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.