இலங்கைக்கு 143 பயணிகளுடன் சென்ற விமானத்தில் திடீரென ஏற்பட்ட ஆபத்து
வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
143 பயணிகளுடன் பயணித்த வியட்ஜெட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான A320 விமானம், நேற்று இரவு இயந்திரக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இயந்திரக் கோளாறு தொடர்பில் விமானக் குழுவினரின் எச்சரிக்கையை அடுத்து விமானம் சென்னைக்கு திசைதிருப்பப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவசரநிலை பிரகடனம்
இரவு 9:55 மணிக்கு முழுமையான அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, விமான நிலைய அவசர காலத் திட்டத்தின் கீழ் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

VJC1875 என்ற இலக்கத்துடன் இயங்கிய இந்த விமானம், இரவு 10.27 மணிக்குச் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
இரவு 10.35 மணிக்கு வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவு மூலமாக அவசரநிலை விலக்கிக் கொள்ளப்பட்டது.
விமானத்தில் பயணம் செய்த 143 பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இன்றி தரையிறங்கினர்.
இயந்திரக் கோளாறுக்கான காரணத்தைக் கண்டறிய விமானம் பரிசோதிக்கப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.