ஈஸ்டர் தாக்குதல்களின் மீதமுள்ள சூத்திரதாரிகள்.. அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்றுள்ளது.
இருப்பினும், குண்டுவெடிப்புகளுக்குப் பின்னாலுள்ள முழுமையான சூழலை வெளிக்கொணரும் முயற்சிகளின் முடிவாக இந்தத் தீர்ப்பைக் கருதக்கூடாது என்று குறித்த சபை கூறியுள்ளது.
கொழும்பு மறைமாவட்டத்தின் வெகுஜனத் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் பேசுகையில், பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் நீதிக்காகப் பல ஆண்டுகள் காத்திருந்த நிலையில், ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதில் திருச்சபை திருப்தி அடைவதாகத் தெரிவித்தார்.
நேற்றைய தீர்ப்பு
வன்முறையை நியாயப்படுத்த மதம் ஒருபோதும் சிதைக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்திய அவர், இந்தத் தீர்ப்பு மதத் தீவிரவாதத்திற்கு எதிரான வலுவான செய்தியையும் அளிக்கும் என்று கூறினார்.

இருப்பினும், தண்டனை பெற்றவர்கள் வழக்கின் ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று குறிப்பிட்ட அருட்தந்தை கிரிஷாந்த, தாக்குதல்களுக்கு வசதி செய்துகொடுத்ததிலோ அல்லது அவை நடைபெற அனுமதித்ததிலோ வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணைகள் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தாக்குதல்களைத் தடுப்பதற்கான போதுமான தகவல்கள் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்தும் அவர்கள் செயல்படத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், அந்தத் தோல்விக்குப் பின்னால் பரந்த அளவிலான ஈடுபாடு அல்லது உள்நோக்கம் ஏதேனும் இருந்ததா என்பதை விசாரணையாளர்கள் கண்டறிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
புலனாய்வுத் தகவல்கள்
முந்தைய அதிகாரப்பூர்வ விசாரணைகள் முன்கூட்டியே கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் கையாளப்பட்ட விதம் குறித்து ஆராய்ந்துள்ளன; அதேவேளை, உயர் அதிகாரிகளின் தோல்விகள் தொடர்பான அடிப்படை உரிமை மனுக்கள் மீதும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முந்தைய விசாரணைகள் மற்றும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு எதிராக, ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அருட்தந்தை கிரிஷாந்த அழைப்பு விடுத்தார்.
தாக்குதல்களுக்கும் அது தொடர்பான தோல்விகளுக்கும் பொறுப்பானவர்கள் அனைவரும் முறையாக விசாரிக்கப்பட்ட பின்னரே நீதி செயல்முறை முழுமையடைந்ததாகத் திருச்சபை கருதும் என்றும் அவர் கூறினார்.
தாக்குதல்களுக்குப் பின்னால் வேறு நபர்கள் இருந்தார்களா என்பதைக் கண்டறியவும், பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் திருச்சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் திக்.. திக்.. நிமிடங்கள்..! குற்றவாளியின் கருத்தால் கதிகலங்கி நிற்கும் முக்கியஸ்தர்கள்
YOU MAY LIKE THIS..