சர்ச்சைக்குரிய கிரிஷ் விவகாரம்! நாமலின் கையெழுத்து அடங்கிய ஆவணம் பகுப்பாய்வு
சர்ச்சைக்குரிய கிரிஷ் சொத்து பரிவர்த்தனை தொடர்பான தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கையெழுத்து அடங்கிய ஆவணம் அரசாங்க பகுப்பாய்வாளரின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (06) அன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தகவல் வெளிப்பட்டுள்ளது.
கிரிஷ் வழக்கில் பிணை
கிரிஷ் வழக்கில் பிணை வழங்கப்பட்டிருந்தும், பிற சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவும், கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதேச செயலாளர் மற்றும் முன்னாள் நில ஆணையாளர் உட்பட பல நபர்களிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான உதவிப்பணிப்பாளர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சவின் கையெழுத்து அடங்கிய மூல ஆவணத்தை ஆய்வு செய்வதற்காக அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம் கோரியுள்ளதாக ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணையின் முன்னேற்ற அறிக்கை
அசல் ஆவணம் தற்போது கொழும்பு உயர் நீதிமன்ற வழக்குக் கோப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆவணத்தை ஆய்வுக்காக விடுவிக்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடக்கோரி இலஞ்ச ஆணைக்குழு கோரியுள்ளது.
இருப்பினும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையில் இந்த கோரிக்கை சேர்க்கப்படவில்லை என்றும், முறையாக ஆவணப்படுத்தப்பட்ட ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து நவம்பர் 20 அன்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.