பிலிப்பைன்ஸில் இலங்கை மற்றும் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு
பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் முக்கிய நிகழ்வுகளுக்கு இடையே, இலங்கை, இந்திய, பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலீலுர் ரஹ்மான் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்புத் தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிராந்திய அளவிலான இந்த முக்கிய மாநாட்டின்போது இலங்கை மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விவகாரங்கள்
ஆசிய - பசிபிக் பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாட்டில், பிராந்திய பாதுகாப்பு, கூட்டுறவு மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்கள் தொடர்பில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இன்றும், நாளையும் நடைபெறவுள்ள 33 ஆவது ஆசிய பிராந்திய கூட்டமைப்பு மாநாடு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நட்பு மற்றும் கூட்டுறவு ஒப்பந்தத்தின் 50 ஆவது ஆண்டு விழா ஆகிய இரண்டிலும் அமைச்சர் விஜித ஹேரத் உரை நிகழ்த்தவுள்ளார்.
பேச்சுவார்த்தை
ஆசியான் அமைப்பின் பொதுச்செயலாளர், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்படப் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்து அவர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

பிலிப்பைன்ஸ் வெளிவிவகாரச் செயலாளர் மா. தெரேசா பி. லசாரோவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடவுள்ளது.
அத்துடன், இப்பயணத்தின் ஒரு பகுதியாகப் பிலிப்பைன்ஸின் மண்டனாவோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் கௌரவத் தூதரக அலுவலகத்தையும் அமைச்சர் விஜித ஹேரத் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.