கடுமையான மற்றும் வேதனைமிக்க பதிலடி கொடுக்கப்படும் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்
மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் முன்பை விட அதிவேகமான, கடுமையான மற்றும் வேதனைமிக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான், அமெரிக்காவை கடுமையாக எச்சரித்துள்ளது.
ஈரானியப் பாராளுமன்ற சபாநாயகர் மொஹம்மத் பாகர் காலிபாஃப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் தடைகளால் பொருளாதாரப் பாதிப்புகளைச் சந்தித்து வரும் ஈரான், அவற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரானியப் புரட்சிகரக் காவல் படை அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று ஈரானின் 3 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது அமெரிக்க மத்திய கட்டளையகம் தாக்குதல் நடத்தியது.
ஈரானுக்கு எதிரான போரில் "விளையாட்டின் விதிகள் மாறிவிட்டன" என்பதை அமெரிக்கா தாமதமாவதற்குள் புரிந்துகொள்ள வேண்டும் என சபாநாயகர் காலிபாஃப் குறிப்பிட்டுள்ளார்.
இனி ஈரானின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு எதிராக நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் பன்மடங்கு கடுமையான பதிலடி அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
வடக்கு ஈராக்கின் எர்பில் பகுதியில் அமெரிக்காவின் வான்வழிக் கண்காணிப்பு பலூன் ஒன்றை ஈரானியப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90% பங்கு வகிக்கும் முக்கிய மையமான கார்க் தீவு கடந்த மாதங்களில் சுமார் 550 முறை தாக்குதலுக்கு உள்ளானபோதிலும், அதன் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரானிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் மொஹ்சின் பாக்னெஜாத் தெரிவித்துள்ளார்.
இராணுவப் போருக்கு நிகராக, தற்போது உற்பத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே ஈரானின் முக்கியப் போராக மாறியுள்ளதாகச் சபாநாயகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளைச் சமாளிக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri