மகிந்த பெயரை கூறுமாறு கபில சந்திரசேனவிற்கு அழுத்தம்! மரணத்திற்கு முன் பிரமாணப் பத்திரத்தில் அம்பலம் - சாகரவின் தகவல்
இலங்கையை விட்டுத் தப்பி சென்று 13 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் தொழிலதிபர் நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே, நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர கரியவசம் தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
உடன்படிக்கை இரத்தானதால் இழப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், 2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக 08 ஏர்பஸ் விமானங்களை வாங்குவதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டதாகவும், 2015ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அந்த உடன்படிக்கையை இரத்து செய்தபோது, அரசாங்கத்திற்கு 116 மில்லியன் டொலர்கள் (37 பில்லியன் ரூபாய்க்கும் மேல்) இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பரிவர்த்தனையில் குற்றம் சாட்டப்பட்ட நிமல் பெரேரா, சம்பந்தப்பட்ட கணக்குகளுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என முன்னர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, 13 ஆண்டுகள் கழித்து அவுஸ்திரேலியாவிலிருந்து நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டது ஒரு கடுமையான பிரச்சினை என்று செயலாளர் குறிப்பிட்டார்.
மகிந்தவின் பெயரை கூறுமாறு அழுத்தம்
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான கபில சந்திரசேன, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும், மகிந்த ராஜபக்சவின் பெயரை கூறுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், தனது மரணத்திற்கு முன்பு ஒரு பிரமாணப் பத்திரம் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் என சாகர கரியவசம் வெளிப்படுத்தினார்.
எந்தவொரு அறிவியல் சான்றுகளோ அல்லது வங்கிப் பதிவுகளோ இன்றி, தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மட்டுமே இந்தச் செயல்முறையை நடத்துகிறது என்றும், இது ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.