அதானி நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் அவசர சந்திப்பு
இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானியின் நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் அடுத்த வாரத்தில் பேச்சுவார்த்தை ஒன்று ஏற்பாடாகியுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி, இலங்கையில் இருந்து தனது காற்றாலை மின்சார திட்டத்தை திரும்பப் பெற முடிவு செய்ததாக செய்தி வெளியான சில மணி நேரங்களுக்குப் பின்னர், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மன்னாரில் காற்றாலை மின்சாரத் திட்டம் உட்பட்ட பிற மின்மாற்றத் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவது குறித்த முடிவை எட்ட முடியுமா என்பதை மையப்படுத்தி, மூடிய கதவுகளுக்குப் பின்னால், இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரப்பூர்வ அறிக்கை
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இலங்கையும் இந்தியாவும் ஏற்கனவே 14 சுற்று விவாதங்களை நடத்தியுள்ளன. எனினும் ஒப்புதல்களைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் இந்திய தரப்பு தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கடந்த புதன்கிழமை முதலீட்டு சபைக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், நேற்று ஊடகங்களில் வெளியானதன் பின்னரே, நிதியமைச்சுக்கு இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஒரு பெரிய அளவிலான வெளிநாட்டு முதலீடு நாட்டிலிருந்து வெளியேறும்போது, நிதி அமைச்சகம் மற்றும் ஜனாதிபதிக்கு முதலில் தெரிவிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படவேண்டும்.
ஒத்துழைக்க தயார்
எனினும், மிகவும் ரகசியமாக இருந்த இந்தக் கடிதம் ஊடகங்களுக்கு எவ்வாறு கசிந்தது என்பது குறித்து முதலீட்டு சபை கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
இலங்கை ஊடகங்களில் இந்த விடயம் வெளியான நிலையில், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு, தமது முடிவை உறுதிப்படுத்தியது.
இருப்பினும், இலங்கை அரசாங்கம் விரும்பினால், அதனுடன் ஒத்துழைக்க தயாராகவிருப்பதாகவும் அதானி நிறுவனம், தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |