வடக்கில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு (Photos)
வட்டுக்கோட்டை
வட்டுக்கோட்டையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பும் மாவீரர் நினைவேந்தலும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை (25.11.2023) இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை செயலாளர் பற்றிக் தனுஷ் தலைமையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்பொழுது தாயக விடுதலைக்காக தன்னுயிரை இன்னுயிராக்கிய மாவீரர் பெற்றோர்களால் ஈகைச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியும் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சி
தொடர்ச்சியாக மாவீரர்களின் நினைவாக மாவீரர் பெற்றோர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி மதிப்பளிக்கபட்டதோடு தொடர்ச்சியாக முன்னாள் போராளி செழியனால் மாவீரர்களின் நினைவுரை முன்னெடுக்கப்பட்டது.
இறுதியாக மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிய போசனமும் பரிமாறபட்டது.
இதன்பொழுது மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வில் மாவீரர் பெற்றோர்கள், உரித்துடையோர் , இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,முன்னாள் போராளி செழியன், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை மகளிர் அணி செயற்பாட்டாளர்கள் ,இளைஞர் அணியினர் ,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலதிக செய்திகள்: கஜி மற்றும் தீபன்
கரவெட்டி
ஜனநாயக போராளிகள் கட்சியினால் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று காலை 11: 00 மணியளவில் கரவெட்டியில் இடம் பெற்றது.
முதல் நிகழ்வாக மாவீரர்கள் பெற்றோர்கள் விதையிலிருந்து மங்கல வாத்தியம் முழங்க அழைத்துவரப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் மண்டபத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டி மலர்மாலை மலரஞ்சலி செலுத்தப்பட்டு மௌன வணக்கம் செலுத்தப்பட்டது.
ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தலமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழவில் ஜனநாயக கட்சியின் செயலாளர் துளசி உட்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் மற்றும் விசுவமடு பகுதியில் உள்ள மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் சார்ள்ஸ் நிர்மலநாதன் தற்பொழுது அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக ஊடகங்களுக்கு
கருத்து தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்: யது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



