நாடாளுமன்ற நுழைவாயில் அருகே போராட்டக்காரர்கள் : பலப்படுத்தப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு
புதிய இணைப்பு
அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்திற்கும் (PSTA) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்திற்கும் எதிராக மக்கள் போராட்ட இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் இன்று (04) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆர்பாட்டமானது நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியின் பொல்துவ சந்தியில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இதன்காரணமாகப் பொல்துவ சந்தியில் பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக பொல்துவ சந்தி மற்றும் நாடாளுமன்ற சுற்றுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று(04.11.2026) மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற நுழைவாயில் சந்தியில் நண்பகல் 12 மணிக்கு இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் போராட்ட முன்னணி அறிவித்துள்ளது.
போராட்டத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு
எந்தவித திருத்தங்களும் இன்றி, இவ்விரு சட்டமூலங்களும் முழுமையாக மீளப்பெறப்பட வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே கொழும்பில் நேற்று(03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

அரசால் கொண்டுவரப்படவுள்ள இந்தச் சட்டமூலங்கள் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகவும், அடக்குமுறைகளை ஏவிவிடுவதாகவும் என்று சுட்டிக்காட்டிய அவர், அனைத்துத் தரப்பினரையும் இந்தப் போராட்டத்தில் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.