சீனி இறக்குமதியில் இடம்பெறும் பாரிய மோசடி: வெளியான தகவல்
கடந்த காலத்தில் பாரிய சீனி மோசடியில் ஈடுபட்ட அதே சீனி இறக்குமதியாளர், அண்மையில் சீனி இறக்குமதி மீதான வரி அதிகரிப்புக்குப் பின்னர், இரண்டாவது தடவையாகவும் மோசடியிலும் ஈடுபட்டார் என ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
அரசாங்கம், சீனி மீதான இறக்குமதி வரியை 25 சதத்தில் இருந்து 50 ரூபாவாக கடந்த வாரம் அதிகரித்தது.
16 பில்லியன் ரூபாய் மோசடி
இது, குறிப்பிட்ட சீனி இறக்குமதியாளர் அதிக இலாபத்தை ஈட்ட அனுமதித்துள்ளது. இந்த இறக்குமதியாளர் அக்டோபர் 30 ஆம் திகதி வரி அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் 8,600 மெட்ரிக் டன் சீனியை இறக்குமதி செய்துள்ளார்.
இதன்போது ஒரு கிலோவுக்கு 25 சதம் என்ற வரியில் சுங்கத்திலிருந்து அந்த இருப்பை விடுவித்துள்ளார்.
இந்தநிலையில் வரி அதிகரிப்பின் பின்னர், குறித்த சீனி இறக்குமதியாளர், இறக்குமதி செய்யப்பட்ட கையிருப்பு சீனியை 100 ரூபா அதிகமாக விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.
மேலும் அவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த இறக்குமதியாளர் மேற்கொண்ட சீனி ஊழலில் 16 பில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் தாம் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததையும் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.