மன்னார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைகள் தொடர்பில் ரவிகரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளை கஸ்ட மருத்துவமனைகள் என்ற பட்டியலில் இருந்து அகற்றி சமச்சீரான சேவை வழங்கலில் இணைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றையதினம்(7) நாடாளுமன்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், உள்ளக பயிற்சி மருத்துவர்களுக்கான சேவை நிலையங்களாக கடந்த கடந்த 2025.06.06 அன்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தீவில் உள்ள 23 மாவட்டங்களைச் சார்பாக்கும் 64 மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டு இருந்தன.
மருத்துவர்கள் பற்றாக்குறை
28 ஆதார வைத்தியசாலைகளில் கூட, காணப்படும் இவ்வசதி நாட்டின் 24ஆவது 25ஆவது மாவட்டங்களாக உள்ள மன்னாரிலும் முல்லைத்தீவிலும் இல்லை என்பது இந்த நாட்டின் மருத்துவ சேவை வழங்கலில் மேற்படி இரு மாவட்டங்களும் மிகவும் சமச்சீராக அணுகப்படவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.
முல்லைத்தீவில் 21 மருத்துவர்கள் பற்றாக்குறை. ஒரு நிரந்தர மருத்துவ நிபுணர்கூட இல்லை. மருந்துக்கலவையாளர்கள் 23 பேர் இல்லை. தாதிய உத்தியோகத்தர் 13 பேர் இல்லை.
2025.07.21 இன் படி இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆளணி வெற்றிடம் முல்லைத்தீவு பிராந்திய மருத்துவ சேவை வழங்கலில் இருப்பதும் சமச்சீரற்ற சேவை வழங்கலின் சான்றே எனத் தெரிவித்துள்ளார்.
பரிசோதனை
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இருப்பினும் மேலும் தேவையான விசேட மருத்துவப் பரிசோதனைகளுக்கும், தனித்துவமான இரசாயன பரிசோதனைளுக்கும் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவகையிலே யாழ்ப்பாணம் மருத்துவமனை, வவுனியா மருத்துவமனை, அனுராதபுரம் மருத்துவமனை, சில சந்தர்ப்பங்களில் கண்டி மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கும் நோயாளர்கள் அனுப்பப்படுகின்றனர்.
அனைத்துப் பரிசோதனைகளையும், அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்கமுடியாத நிலை காணப்படுகின்றது.
பயிற்சி நடவடிக்கை
இந்நிலையில் அனைத்து மாவட்ட பொதுவைத்தியசாலைகளுக்கும் போதுமான அளவு பணியாட்தொகுதி மற்றும் பௌதீக வளங்கள் வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது.
அரச நிதிமூலமாகவும், அன்பளிப்புக்களினூடாகவும் மாங்குளம், கிளிநொச்சி பருத்தித்துறை, யாழ்ப்பாணம் மருத்துவமனைகளை மேம்படுத்தவேதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
தேவையான மனிதவளங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், பணியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




