நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ரிசாட் எம்.பி
நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று (07) 20 தமிழ் - சிங்கள் தம்பதியினருக்கு பதிவு திருமணம் செய்து வைத்ததன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நானும் பாதிக்கப்பட்ட ஒருவன். அதே போல் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
விசாரணை
நாடு குட்டிச் சுவராகியிருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். தூய விசாரணையின் பின் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டணை வழங்கப்பட வேண்டும் என்பதில் நானும் விருப்பத்தில் இருக்கிறேன்.
மாகாண சபை தேர்தல் நடத்தியே ஆக வேண்டும். அந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனநாயக கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி அரசாங்கத்துக்கு அழுத்தத்தை கொடுத்திருக்கிறது.
அரசாங்கத்திடம் நாங்கள் வேண்டி இருக்கிறோம். மாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வருவதற்காக பிற்போடப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தல்
அந்த திருத்தம் செய்வதாக இருந்தால் காலதாமதம் ஆகும் என்பதனால் பழைய முறையின் பிரகாரம் செய்வது சாத்தியமானது என்பதை அரசாங்கத்துக்கு வலியுறுத்தி இருக்கின்றோம்.
அவ்வாறு செய்வதாக இருந்தால் மூன்றில் இரண்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு இலகு. அரசாங்கம் அந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்வது மிக இலகுவாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.




