கோட்டை பொலிஸார் தாக்கல் செய்த மனு நீதிபதியால் நிராகரிப்பு
பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, கடற்றொழிலாளர் குழுவினால் நடத்தப்பட்ட போராட்டத்தை நிறுத்த உத்தரவிடக் கோரி கோட்டை பொலிசார் தாக்கல் செய்த மனுவை கொழும்பு கோட்டை நீதிபதி இசுரு நெத்திகுமார நிராகரித்தார்.
அடிப்படை உரிமை
இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அமைதியான போராட்டங்களில் ஈடுபட பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்றும், போராட்டம் நடத்துவது மக்களின் அடிப்படை உரிமை என்றும் கூறினார்.

போராட்டக்காரர்கள் மோட்டார் போக்குவரத்துச் சட்டம் மற்றும் காவல்துறை கட்டளைச் சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளை மீறி, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களை நடத்தினால், அவர்களின் சட்ட அதிகாரங்களின்படி செயல்படுமாறு நீதிபதி மேலும் அறிவுறுத்தினார்.
உழவு யந்திரங்களில் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மீன்பிடித் தொழிலுக்கு தற்போதைய அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரியே, போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.