பாடசாலை மாணவியை தவறான முறைக்கு உட்படுத்திய நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை தவறான முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட 52 வயதுடைய நபருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பானது இன்று(13.03.2024) நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரியவினால் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட விசாரணை
கடந்த 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் நானுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த பாருக் மொஹமட் சாலித் என்ற நபர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குக் குறைவான பாடசாலை சிறுமி ஒருவரை தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாடசாலை ஊடாக சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்ததையடுத்து, அந்த நபர் மீது நானு ஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
அதன்பின்னர் அவருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், வழக்குக்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதன்போது சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பாருக் மொஹமட் சாலித் (வயது 52) என்ற நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அத்துடன், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இந்தத் தொகையைப் பாதிக்கப்பட்டவருக்கு வழங்காத பட்சத்தில் குற்றவாளி மேலும் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளி நீதிமன்றத் தண்டனைப் பணமாக 15 ஆயிரம் ரூபாவைச் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, இந்தத் தண்டனை பணத்தைச் செலுத்தாத பட்சத்தில் மேலும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |