சட்டவிரோதமாக பல கோடி ரூபா சொத்து சேர்த்தவருக்கு அதிர்ச்சி - பறிமுதல் செய்த அரசு
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 283,300,000( 28 கோடியே, 33 இலட்சம்) ரூபாய் பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் நபர் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் இப்பாகமுவ பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்
குறித்த நபர் வெளிநாட்டில் மறைந்திருப்பதாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் தொலைபேசி ஊடாக தொடர்புகளைப் பேணி வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் நபரின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கையில் இயங்கும் ஏனைய போதைப்பொருள் வியாபாரிகளிடமிருந்து இவர் பணத்தை சேகரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டவிரோத சொத்துக்கள்
சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட 2 வாகனங்களும் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டவை என வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்தேக நபர் இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.