ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பும் மலேசியா
சுமார் 1,500 ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் மியன்மாருக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை மலேசியா தொடங்கியுள்ளது.
மலேசியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள 'லுமுட்' (Lumut) கடற்படை தளத்திற்கு அருகில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கம் ஒன்றிற்கு, பொலிஸ் பாதுகாப்புடன் பல பேருந்துகளில் அகதிகள் அழைத்து வரப்பட்டனர்.
அங்கிருந்து கடற்படைக் கப்பல்கள் மூலம் அவர்கள் மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அகதிகள் தமாகவே முன்வந்து நாடு திரும்ப விரும்புவதாக மலேசிய அரசு தெரிவித்துள்ள போதிலும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்களால் எவ்வாறு சுதந்திரமான முடிவை எடுக்க முடியும் என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உயிருக்கு அச்சுறுத்தல்
மேலும், மியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே தீவிர சண்டை நடைபெற்று வரும் சூழலில், அகதிகளை மீண்டும் அங்கு அனுப்புவது அவர்களைப் ஆபத்திற்குள் தள்ளுவதற்குச் சமம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதேவேளை, அகதிகள் பாதுகாப்புடன் நாடு திரும்புவதை உறுதி செய்யுமாறு 'எல்லைகளற்ற மருத்துவர்கள்' (MSF) அமைப்பு உட்பட 160-க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகள் மலேசிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
எனினும், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நபர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என மலேசிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.