வெளிநாடொன்றில் நிலவும் சீரற்ற காலநிலையால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்! விமான சேவைகள் இரத்து
தாய்லாந்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், தலைநகர் பேங்கொக்கில் உள்ள பிரதான சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கனமழை காரணமாக நாட்டின் 42 மாகாணங்கள் வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
விமான சேவை இரத்து
தாய்லாந்தின் மிகப்பெரிய விமான நிலையமான சுவர்ணபூமியில், 'தாய் ஏர்வேஸ்' நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் பணிக்கு சமூகளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதமடைந்துள்ளதுடன், சுமார் 5,600 பயணிகளின் பயணப்பொதிகள் தேங்கிக் கிடக்கின்றன.

அத்துடன், தாய் ஏர்வேஸ் நிறுவனம் இன்று(29.9.2026).இயக்கவிருந்த விமானங்களில் 30 சதவீதமானவற்றை இரத்து செய்துள்ளது.
இதேவேளை, வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கவும் சீரமைப்புப் பணிகளுக்காகவும் 4 பில்லியன் பாட் நிதியை தாய்லாந்து அரசாங்கம் ஒதுக்கியுள்ளதுடன், எதிர்கால வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்காக 160 பில்லியன் பாட் செலவிலான நீண்டகால நீர் வடிகால் திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.