நிலக்கரி மோசடியில் சிக்கிக் கொண்ட பிரிலோயர்ஸ் அமைப்பின் மைத்திரி குணரத்ன! திறைசேரி நிதி மோசடியை கடுமையாக விமர்சித்தவர்
2015–2016 காலப்பகுதியில் நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்காக லிபர்ட்டி கொமோடிட்டீஸ் Liberty Commodities நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதன் காரணமாக சுமார் 1,575,630 அமெரிக்க டொலர் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிலக்கரி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று (08.09.2026) வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் அன்றைய தலைவராகப் பணியாற்றிய பிரிலோயர் அமைப்பின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கையொப்பமிட்டிருந்தார்.
முன்னாள் செயலாளரின் சாட்சியம்
இது குறித்த சாட்சியத்தை அன்றைய மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றிய டி. அமரதுங்க தெரிவித்துள்ளார். நேற்று சாட்சியமளித்த அமரதுங்க 2015–2016 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உடனடி நிலக்கரி கொள்முதல் தொடர்பாகத் தமது குழு விசாரணை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.
அமரதுங்கவின் சாட்சியத்தின்படி லக்விஜய அனல்மின் நிலையத்திற்கு விநியோகிக்க தேவையான நிலக்கரியின் தொழில்நுட்பத் தரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விடக் குறையும் பட்சத்தில் விநியோகஸ்தரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய அபராதம் அல்லது விலை மாற்றியமைத்தல் தொடர்பில் ஏல ஆவணங்களில் இருந்த நிபந்தனைகள் இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் போது பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்தன.

தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் கொள்முதல் குழு ஆகியன சமர்ப்பித்த கருத்துக்களையும் சரியாகப் பின்பற்றாமல் இறுதி ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளதாக அமரதுங்க ஆணைக்குழுவின் முன் தெரிவித்துள்ளார்.
இங்கு எளிமையாக கூறுவதானால்இ நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விடக் குறைந்த தரமுடைய நிலக்கரி பெறப்பட்டால் விநியோகஸ்தருக்குச் செலுத்தப்படும் தொகையிலிருந்து கழிக்கப்பட வேண்டிய பணத்தைக் கணக்கிடும் சூத்திரம் ஏல ஆவணத்தில் இருந்தவாறு அல்லாமல் விநியோகஸ்தருக்குச் சாதகமான முறையில் இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருந்தமையே பிரச்சினையாகும்.
கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை
குறித்த ஆணைக்குழு விசாரணையில் வெளிவந்த தகவல்கள்: 2009 முதல் 2016 ஜூன் வரையிலான காலப்பகுதியில் நுரைச்சோலை மின்நிலையத்திற்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையிலும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் ஆறு நீண்டகால நிலக்கரி கொள்முதல்களும் ஐந்து உடனடி கொள்முதல்களும் இதில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின்படி முதலாவது கொள்முதலுக்காக 'லிபர்ட்டி கொமோடிட்டீஸ்' நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததுடன் 165,000 மெட்ரிக் தொன்னுக்கான ஒப்பந்தம் 2015 ஆகஸ்ட் 17 அன்று கையொப்பமிடப்பட்டிருந்தது.

இதன்போது ஏல ஆவணத்தில் சேர்க்கப்பட்டிருந்த வரைவு ஒப்பந்தத்தில் (draft agreement) குறிப்பிடப்பட்டிருந்த சல்பர் (Sulphur) மற்றும் சாம்பல் (Ash) ஆகியவற்றிற்கான விலை சரிசெய்தல் சூத்திரங்கள் இறுதி ஒப்பந்தத்தை எட்டும் போது மாற்றப்பட்டிருந்ததாகக் கணக்காய்வாளர் தலைமை அதிபதி நேரடியாகவே குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஒப்பந்தங்கள் எதிலும் கையொப்பமிடாமல் அதே ஒப்பந்தமே பின்னர் இரண்டாவது மற்றும் நான்காவது கொள்முதல்களுக்காகவும் சமர்ப்பித்ததால் அவ்விரண்டு கொள்முதல்களையும் பாதித்திருந்ததாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நேற்று ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த அமரதுங்கஇ தனது தலைமையிலான மூவர் கொண்ட குழு இவ்வொப்பந்தம் தொடர்பாக மைத்திரி குணரத்னவிடமும் விசாரணை நடத்தியதாகக் கூறினார். அவ்விசாரணையின் போதுஇ குறித்த நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதை குணரத்ன ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டார்.