மகிந்தவின் மீண்டு வரும் மறுமலர்ச்சி: ஓரங்கட்டப்படும் கோட்டாபய
மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன மீண்டும் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மறுமலர்ச்சிக்கான பிரசாரத்திற்கு ஒன்றுப்பட்டு எழுவோம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பெயரிலேயே அவர்கள் விழுந்துவிட்டார்கள் என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது என்று அரசியல் கட்டுரை ஒன்று தெரிவிக்கின்றது.
மறுமலர்ச்சிக்கான பத்துக் கூட்டங்களில் முதல் கூட்டம் களுத்துறையில் இடம்பெற்றுள்ள நிலையில் இரண்டாவது கூட்டம் இன்று கண்டியில் நடைபெறுகின்றது.
பொதுஜன பெரமுனவின் புதிய மறுமலர்ச்சி
இந்த நிலையில் பொதுஜன பெரமுனவின் புதிய மறுமலர்ச்சி திட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஓரங்கட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு பின்னால் இருந்து வியத்கம அமைப்பினர், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவை செயற்படவிடவில்லை என்ற குற்றச்சாட்டு கூட்டத்தில் சுமத்தப்பட்டுள்ளாது.
ராஜபக்ச குடும்பத்தினரின் ஆட்சி
ராஜபக்ச குடும்பத்தினர், ஆட்சியில் பங்கெடுக்கக்கூடாது என்று கோசம் எழுப்பப்பட்டிருந்தபோதும், தேசிய சபையின் துணைக்குழுவுக்கு நாமல் ராஜபக்சவை, பசில் ராஜபக்ச தலைவராக்கியிருக்கிறார்.
இது அவரை எதிர்கால ஜனாதிபதியாக்குவதற்கான அடித்தளம் என்றே கருதப்படுகிறது.
இதேவேளை வெளிநாட்டில் அடைக்கலம் பெற முடியாமல் போனதால், கொழும்புக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட கோட்டாபய ராஜபக்ச, மலலசேகர மாவத்தையில் உள்ள அவரது வீட்டில், அடிக்கடி மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் நண்பர்களை அழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கோட்டாபயவின் அடுத்த நகர்வு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



