மகிந்தவிற்கு எதிராக வெடித்த மற்றுமொரு போராட்டம்! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு (Video)
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாவலப்பிட்டியவுக்கு வருகை தந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளரான சசங்க சம்பத் சஞ்சீவ தலைமையில் எதிரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் எச்சரிக்கை
போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்த பொலிஸார் போராட்டத்துக்கு அனுமதி பெறப்படவில்லை எனவும், கலைந்து செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், போராட்டக்காரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தநிலையில் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சசங்க சம்பத் சஞ்சீவ உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மேலும், நாவலப்பிட்டிய நகருக்கு இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
செய்தி: திருமால்
முதலாம் இணைப்பு
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் நாவலப்பிட்டி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதனை முன்னிட்டு நாவலப்பிட்டி நகரில் இன்று (16.10.2022) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது 15 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சமகி ஜன பலவேகய
பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் நாவலப்பிட்டி சமகி ஜன பலவேகய அமைப்பாளரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆறாவது மாநாட்டில் முக்கிய பல முடிவுகளை அறிவிக்க கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு 'ஒன்றிணைந்து எழுவோம்; களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்' என்ற தொனிப்பொருளுடன் கடந்த 8ஆம் திகதி பொதுஜன பெரமுன முதலாவது கூட்டத்தை களுத்துறையில் நடத்தியது.
பொலிஸார் குவிப்பு
இவ்வாறான பின்னணியில் நாடளாவிய ரீதியில் கூட்டங்களை நடத்தி கட்சியை பலப்படுத்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையிலே இன்று நாவலப்பிட்டி நகரில் கூட்டம் இடம்பெற்றபோதே இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்குப் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகளவானப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.