கோட்டாபய அரசாங்கத்தின் பொருளாதார தீர்மானங்கள் குறித்து விசாரணை ஆரம்பம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார தீர்மானங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணை ஆரம்பம்
கோட்டாபய அரசாங்கத்தின் பிழையான பொருளாதார தீர்மானங்கள் தொடர்பில் விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பீ.சீ. விக்ரமரட்ன தெற்கு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பிரதி கணக்காய்வாளர் நாயகம் ஒருவரின் தலைமையில் இதற்கென விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளுக்கு தேவையான தகவல்கள் மத்திய வங்கி மற்றும் திறைசேரி என்பனவற்றிடமிருந்தும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதியை 203 ரூபாவாக பேணியமை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக் கொள்வதில் காலம் தாழ்த்தியமை உள்ளிட்ட பல்வேறு பொருளாதார தீர்மானங்கள் குறித்து இந்த கணக்காய்வு விசாரணையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
நீதிமன்றில் வழக்கு தாக்கல்
கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தினால் எடுத்த பிழையான பொருளாதார தீர்மானங்களினால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பிரகாரம் கோட்டாபய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கணக்காய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.