போருக்கு முந்தைய நிலைக்கு வீழ்ச்சியடைந்த மசகு எண்ணெய் விலை
மத்திய கிழக்கில் மசகு எண்ணெய் விநியோகம் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையானது ஈரான் போர் தொடங்குவதற்கு முன்னரிருந்த நிலைக்குத் தலைகீழாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, சர்வதேச சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் பெரல் ஒன்றுக்கு 1.06 டொலர்கள் (1.44 சதவீதம்) குறைந்து 72.68 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) மசகு எண்ணெய் விலை 76 காசுகள் குறைந்து 69.58 டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கை
கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதிக்குப் பின்னர் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மிகக் குறைந்த மட்டம் இதுவாகும்.
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கிய போர், அண்மையில் எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையின் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

இதனையடுத்து, போரின் போது முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் சுமார் 20 மில்லியன் பெரல் மசகு எண்ணெய் இந்த நீரிணை வழியாக வெளியேறியுள்ளதாக அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிரிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.
எனினும், கடல் பகுதியில் வீசப்பட்டுள்ள கண்ணிவெடிகளை முழுமையாக அகற்ற இன்னும் சில வாரங்கள் தேவைப்படும் என்பதால், நிலைமை முழுமையாகச் சீரடையச் சற்று காலதாமதமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மசகு எண்ணெய்க்கான தட்டுப்பாடு
அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையில் ஓமான் மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பினால் தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய மாற்று வழித்தடங்களுக்கு ஈரானின் புரட்சிகர இராணுவம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து எச்சரித்துள்ளது.

அத்துடன், இந்த நீரிணையை நிர்வகிப்பதற்குக் கடல்சார் சேவைக் கட்டணங்களை வசூலிக்கப் போவதாக ஈரான் கூறிவரும் நிலையில், இது ஒரு சர்வதேச கடல் வழித்தடம் என்பதால் எவ்வித கட்டணங்களையும் ஏற்க முடியாது என்று அமெரிக்கா மறுத்து வருகிறது.
இத்தகைய அரசியல் இழுபறிகளுக்கு மத்தியிலும், வளைகுடா பிராந்தியத்தில் எண்ணெய் விநியோகம் அதிகரித்துள்ளதால் உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய்க்கான தட்டுப்பாடு நீங்கி, விலை தொடர்ந்து சரிவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.