ஜப்பானின் வடக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் வடகிழக்குக் கடலோரப் பகுதியான தோஹோகு பிராந்தியத்தில் இன்று(25.6.2026)காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவாதே மாகாணத்தின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.
நிலநடுக்கம்
காலை நேர அவசரப் பணி நேரத்தின் போது ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நாட்டின் தலைநகரான டோக்கியோ வரை உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளில் சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கான ஆபத்து எதுவுமில்லை என்று அதிகாரிகள் உடனடியாகத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானின் ஆமோரி மாகாணத்தில் உள்ள ஹாஷிகாமி என்ற நகரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஜப்பானிய நிலநடுக்கத் தீவிர அளவுகோலில் அதிகபட்சமான 7 புள்ளிகளில், '6-பிளஸ்' என்ற மிக ஆபத்தான தீவிரத்தன்மை பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஆமோரி மற்றும் இவாதே மாகாணங்களில் சிலர் இலேசான காயமடைந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்கு இதே அளவிலான தொடர் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு ஜப்பானியப் பிரதமர் சனாயே தகா இச்சி அறிவுறுத்தியுள்ளார்.