கப்பல்கள் அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கக் கூடாது: ஈரான் புரட்சிகர இராணுவம் எச்சரிக்கை
சர்வதேச எரிசக்தி வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை, தங்களது அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் கடக்கக் கூடாது என்று ஈரானின் சக்திவாய்ந்த புரட்சிகர இராணுவம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த உத்தரவை மீறிச் செயல்படும் கப்பல்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், தங்களுக்குத் தெரியாமல் உருவாக்கப்பட்டுள்ள புதிய கடல் வழித்தடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஈரான் இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நீடித்த போரின் போது, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முற்றிலுமாக முடக்கியிருந்தது.
நிரந்தர அமைதிக்கான பேச்சுவார்த்தை
தற்போது இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு, நிரந்தர அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில், இந்த நீரிணையின் எதிர்காலக் கட்டுப்பாடு யாசம் இருக்க வேண்டும் என்பது ஒரு முதன்மையான முரண்பாடாக உருவெடுத்துள்ளது.
இந்த நீரிணையை நிர்வகிப்பதற்கான 'கடல்சார் சேவை கட்டணங்களை' எதிர்காலத்தில் வசூலிக்கப் போவதாக ஈரான் மற்றும் ஓமான் நாடுகள் தெரிவித்துள்ளன. ஆனால், இது ஒரு சர்வதேச கடல் வழித்தடம் என்பதால் எவ்வித கட்டணங்களையும் விதிக்கக் கூடாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வளைகுடா நாடுகளுக்கான தனது பயணத்தின் போது வலியுறுத்தியுள்ளார்.

மாற்றுப் பாதை
இத்தகைய அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், லைபீரிய நாட்டுக் கொடியுடன் வந்த 'ஸ்டோயிக் வாரியர்' என்ற எண்ணெய் கப்பல், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் கடற்கரைகளை ஒட்டி ஐநா அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட புதிய மாற்றுப் பாதையைப் பயன்படுத்தி ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துள்ளது.
இந்த புதிய வழித்தடமானது தங்களது இராணுவக் கட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளதால், ஈரான் பாதுகாப்புப் படையினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20 சதவீதத்தைக் கையாளும் இந்த முக்கிய வழித்தடத்தின் மீதான தங்களது பிடியையும் அதிகாரத்தையும், இறுதி உடன்படிக்கைக்குப் பின்னரும் எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.