புலிகளின் சந்தேக நபருக்கும் அரச இலக்கிய விருது-சிறந்த நாவலுக்கான விருதை பெற்றார்
பண்டாரநாயக்க ஞாபகார்ந்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் சிறந்த தமிழ் நாவலுக்கான விருது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் சந்தேக நபருக்கு கிடைத்துள்ளது.
சிவலிங்கம் ஆரூரன் எழுதிய "ஆதுரசாலை" என்ற நாவல் சிறந்த தமிழ் நாவலாக தெரிவு செய்யப்பட்டது.
கோட்டாபயவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் சம்பவத்தின் சந்தேக நபர்
சிவலிங்கம் ஆரூரன் கொழும்பு பித்தாளை சந்தியில் கடந்த 2006 ஆம் ஆண்டு அன்றைய பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்சவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதலின் சந்தேக நபராக மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான அவர், பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பை கற்றுக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார்.
மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர், 7 தமிழ் நாவல்களையும் ஒரு ஆங்கில நாவலையும் எழுதியுள்ளார். இந்த அனைத்து நாவல்களும் அரச இலக்கிய விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
2016 ஆம் ஆண்டும் சிறந்த நாவலுக்கான விருதை பெற்றார்
கடந்த 2016 ஆம் ஆண்டு சிறந்த தமிழ் நாவலுக்கான அரச இலக்கிய விருதும் அவருக்கே கிடைத்துள்ளது. அரச இலக்கிய விருது வழங்கும் விழாவுக்கு சிரேஷ்ட சிறைச்சாலை அத்தியட்சகர் ஜகத் வீரசிங்க உட்பட சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் ஆரூரன் அழைத்து வரப்பட்டார்.
அரச இலக்கிய விருது வழங்கும் விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றதுடன் புத்தசாசனம்,சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆரூரனுக்கு விருதை வழங்கியுள்ளார்.
ஆரூரனின் பெற்றோரும் விழாவில் கலந்துக்கொண்டனர். ஆரூரனின் தந்தை ஒரு விமான பொறியியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.