உக்ரைன் வான் பாதுகாப்பு திட்டத்தில் மாற்றம்.. கொண்டுவரப்படவுள்ள புதிய ஏவுகணைகள்!
உக்ரைனின் பிரபல 'ஃபிளமிங்கோ' (Flamingo) க்ரூஸ் ஏவுகணைகளைத் தயாரிக்கும் ஃபயர் பாயிண்ட் (Fire Point) நிறுவனம், ஐரோப்பிய நிறுவனங்களுடன் இணைந்து புதிய வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆனால் அதிக விலையுள்ள 'பேட்ரியாட்' (Patriot) அமைப்பிற்கு மாற்றாக, மிகக் குறைந்த செலவில் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட உள்ளது.
உக்ரைன் மற்றும் ஈரான் போர்களால் உலகளவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை அழிப்பதற்கான செலவை 1 மில்லியன் டொலருக்கும் குறைவாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் டெனிஸ் ஸ்டிலியர்மேன் தெரிவித்துள்ளார்.
ஏவுகணைகளுக்கு தட்டுப்பாடு
தற்போது உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் பெரிதும் நம்பியிருக்கும் பேட்ரியாட் அமைப்பில், ஒரு ஏவுகணையை வீழ்த்த பல மில்லியன் டொலர் மதிப்புள்ள இரண்டு அல்லது மூன்று ஏவுகணைகள் தேவைப்படுகின்றன.

மேலும், மத்திய கிழக்கு போரினால் பேட்ரியாட் ஏவுகணைகளுக்கு உலகளாவிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஃபயர் பாயிண்ட் நிறுவனம் தனது போர்க்கள அனுபவத்தைப் பயன்படுத்தி 2027ஆம் ஆண்டிற்குள் தனது முதல் பாலிஸ்டிக் ஏவுகணை தடுப்புச் சோதனையை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ரேடார் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கும் ஹென்சோல்ட் (Hensoldt), சாப் (SAAB) மற்றும் தேல்ஸ் (Thales) போன்ற ஐரோப்பிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட அந்நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.
தவிர, ஒரு மத்திய கிழக்கு கூட்டமைப்பு நிறுவனம் ஃபயர் பாயிண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ள நிலையில், அதன்மூலம் நிறுவனத்தின் மதிப்பு 2.5 பில்லியன் டொலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முதலீடு குறைந்த சுற்றுப்பாதை செயற்கைக்கோள் ஏவுதல் போன்ற புதிய வணிக வாய்ப்புகளையும் உருவாக்கும். ரஷ்யாவுடனான போரில் பெற்ற அனுபவத்தால் குறைந்த விலை பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் உக்ரைன் தற்போது உலகளவில் முன்னோடியாகத் திகழ்கிறது.
பல உக்ரைனிய பாதுகாப்பு நிறுவனங்கள் இப்போது தங்கள் உபரி உற்பத்தித் திறனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், உலகளாவிய இராணுவச் சந்தையில் தடம் பதிக்கவும் தீவிரமாக முயன்று வருகின்றன.