ஒரு கட்சி ஆட்சி முறைமைக்கு ஒருபோதும் இடமளியோம் - மொட்டுக் கட்சி திட்டவட்டம்
நிறைவேற்று அதிகாரத்துடன் நாடாளுமன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகின்றது. ஆனாலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவை போதாது எனக் கூறுகின்றார். இதன் ஊடாக மறைமுகமாக ஒரு கட்சி ஆட்சி முறைமையை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "தற்போது மாகாண சபைகளின் அதிகாரம் முற்றுமுழுதாக அதிகாரிகள் வசமாகியுள்ளது.
அவர்கள் அரசின் பிரதிநிதிகளாகவுள்ளனர். மறுபுறம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் காணப்படுகிறது.
தாஜூதீன் கொலை விவகாரம்
இவை அனைத்துக்கும் மேலாக நிறைவேற்று அதிகாரமும் காணப்படுகின்றது. ஆனால், இவ்வாறு அதி உச்ச அதிகாரங்களைத் தம்வசம் வைத்துக் கொண்டும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவை போதாது என ஜனாதிபதி கூறுகின்றார்.
எனவே, தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு தனிக் கட்சி ஆட்சி முறைமை வேண்டும் என்கின்றனர்.
தற்போது தாஜூதீன் கொலை விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த காலங்களில் ராஜபக்சக்களை இதனுடன் தொடர்புபடுத்தியவர்கள், இன்று அதை வேறு திசைக்குக் கொண்டு சென்றுள்ளனர். உண்மையில் இவை எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்துவதற்காகக் கூறப்படும் கதைகளாகும்.
அரசின் இயலாமை
போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்கள் எனக் கூறிக் கொண்டு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பிரதானி பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் பல கிலோ கிராம் போதைப்பொருட்களைக் கைப்பற்றி அழிப்பதாகக் கூறினாலும், எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் சமூகத்தில் போதைப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.
போதைப்பொருள் பிரசாரம் தோல்வியடைந்துள்ளதால், தாஜூதீன் கொலையைப் பேசுபொருளாக்கியிருக்கின்றனர்.
அரசின் இயலாமை இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயத்தை அழித்து ஒரு கட்சி ஆட்சி முறைமைக்கு ஒருபோதும் இடமளியோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



