உடனடியாக வெளியேற தயாராக இருக்கவும்! மக்களுக்கு அவசர எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து பல மாவட்டங்களுக்கு விடுத்துள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மீண்டும் நீடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (12.10.2026) மாலை 4 மணி முதல் நாளை (13) மாலை 4 மணி வரை 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம்,
- பதுளை மாவட்டம்: எல்ல, பசறை
- கொழும்பு மாவட்டம்: பாதுக்க
- கண்டி மாவட்டம்: ஹதரலியத்த, தும்பனை
- கேகாலை மாவட்டம்: தெஹியோவிட்ட, கேகாலை, ரம்புக்கனை, யட்டியாந்தோட்டை, அரநாயக்க, வரக்காப்பொல
- மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை, மாத்தளை
- நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத்த
- இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, அயகம, எஹெலியகொட, வெலிகேபொல, இரத்தினபுரி, களவானை, இம்புல்பே, நிவித்திகலை ஆகிய பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள், அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிலச்சரிவு ஆராய்ச்சி மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஏ.எல்.கே.லக்ஸிரி இந்திரதிலக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடும் மழையினால் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிலச்சரிவு ஆராய்ச்சி மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஏ.எல்.கே.லக்ஸிரி இந்திரதிலக கூறியுள்ளார்.
தற்போதைய வானிலை நிலவரம் குறித்த தகவல்களை வழங்குவதற்காக இன்று (12.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவு முன்னெச்சரிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்துள்ளது; இதன் விளைவாக, மாத்தளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ஏற்கனவே நிலை 1 மற்றும் நிலை 2 நிலச்சரிவு முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
அடுத்த சில நாட்களில் 100 மி.மீ முதல் 150 மி.மீ வரையிலான கடும் மழை பெய்தால் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் முன்னறிவிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

மத்திய மலைநாட்டின் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதால், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பல இடங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவசரநிலை
முன்னர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள், அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஏனெனில் மண்சரிவு, பாறை சரிவு மற்றும் சாலைகள் தாழிறங்குதல் போன்ற சம்பவங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
YOU MAY LIKE THIS...