யோசித ராஜபக்ச மீதான காணி அபகரிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய நீதிமன்ற அமர்வின்போது பிரதிவாதியான யோசித ராஜபக்ச ஆஜராகியிருக்கவில்லை. அவர் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், யோசித ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு காரணமாகவே அவரால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாமல் போயுள்ளது என்பதை குறிப்பிட்டார்.
விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை
அத்துடன், வழக்கு விசாரணையை வேறொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். சட்டத்தரணியின் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மேலும், அன்றைய தினம் அந்த வழக்கில் சாட்சியமளிக்க வேண்டிய கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துச் சாட்சிகளையும் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் நீதிபதி இதன்போது அறிவுறுத்தினார்.
தெஹிவளை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் 100 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியைக் கொண்ட ஐந்து காணிகளைச் சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சட்டமா அதிபரால் யோசித ராஜபக்சவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri