மட்டக்களப்பு முன்னாள் - இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஊழல் மற்றும் மோசடி
ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும், சட்டம் தனது கடமையை சுயாதீனமாக முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அனைவரும் சட்டத்திற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

விசாரணைகளின் முடிவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கந்தசாமி பிரபு கூறினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்ட ஆட்சியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதிகள், ஆளுநர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
இதேவேளை, நாமல் ராஜபக்ச சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ராஜபக்ச குடும்பத்தினர்
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாகக் கருத்துகளை வெளியிடுவது குறித்து கந்தசாமி பிரபு விமர்சனம் முன்வைத்தார்.
ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினரை விமர்சித்த போதிலும், பின்னர் அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்ததாகவும், தற்போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொள்பவர்களை பாதுகாக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் கந்தசாமி பிரபு மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு சர்ச்சை! 2 மில்லியன் டொலர் இழப்பு - 200 மில்லியன் டொலர் இழப்பு
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri