யாழ். நெடுந்தீவிற்கான குமுதினி படகு சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
திருத்த வேலைகளின் பின்னர் நெடுந்தீவு பயணிகளுக்காகத் தயாராக இருந்த குமுதினி படகானது மீண்டும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுச் செயலிழந்துள்ளது.
திருத்த வேலைகளின் பின்னர் குமுதினி படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு குறிக்கட்டுவான் இறங்குதுறையில் நேற்று காலை (29.07.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்புடன் நடைபெறவிருந்த நிலையிலேயே படகில் மீண்டும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த குமுதினி படகு அடிக்கடி செயலிழந்து வந்துள்ளது.
படகுக்கான பரிசோதனை
இந்நிலையில், இந்த குமுதினி படகு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் நிறுத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் படகின் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
படகு திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனைக் கடலுக்குள் இறக்குவதற்கான நடவடிக்கை அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, படகுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஐந்து தடவை குமுதினி படகு இயக்கப்பட்டது.
திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு
குறித்த படகை மீள செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில், நேற்றைய தினம் படகினை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கான நிகழ்வு ஆரம்பமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன் படகினை இயக்கி குறிக்கட்டுவான் இறங்குதுறைக்கு கொண்டுவரும்போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுச் செயலிழந்துள்ளது.
இதேவேளை படகின் செயலிழந்த இயந்திரப் பகுதி திருத்தப் பணிக்காக நீர் கொழும்புக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளதாகவும் தமது திணைக்கள நிபுணத்துவ குழுவின் பரிசோதனைக்குப் பின்னரே மீண்டும் படகுச் சேவையை ஆரம்பிக்க முடியும் என்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் குரூஸ் தெரிவித்துள்ளார்.
குமுதினி படகு 1968ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கான கடல்வழிப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |