மீண்டும் சேவையை ஆரம்பிக்கவுள்ள குமுதினி படகு(Photos)
திருத்த வேலைகளுக்காக பல மாதங்களாக வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் நிறுத்தப்பட்ட குமுதினி படகு திருத்த வேலைகள் முடிவுற்று மீண்டும் கடலில் இறக்கப்பட்டது.
குறிக்கட்டுவான் - நெடுந்தீவு கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகு அடிக்கடி கோளாறு ஏற்பட்ட நிலையில் குறிக்கட்டுவானிலிருந்து வல்வெட்டித் துறை ரேவடி கடற்கரைக்கு திருத்த வேலைகளுக்காக கொண்டு செல்லப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சுமார் எழுபது இலட்சம் ரூபாய்க்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த படகு புனரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது.
கடலுக்குள் இறக்கப்பட்ட படகு
குறித்த படகை கடலுக்குள் இறக்குவதற்காக நேற்று( 20) செவ்வாய்க்கிழமை மதியம் பொங்கல் பொங்கி வழிபாடு இடம்பெற்றதுடன் சம்பிரதாய பூர்வமாக படகின் குறிப்பிட்ட பகுதி கடலுக்குள் இறக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை ரேவடி கடலில் இரு நாட்கள் கடலில் தரித்து அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் சரியா என ஆராய்ந்த பின்னர் குறிக்கட்டுவான் நோக்கி பயணமாகவுள்ளது.
கடந்த 1968 முதல் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குறித்த பயணிகள் படகானது அன்றிலிருந்து நீண்டகாலம் நெடுந்தீவு மக்களை வெளியுலகத் தொடர்பில் வைத்திருக்க உதவியாக அமைந்ததுடன் பலமுறை பழுதடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





